Sunday, 20 August 2017

தும்பல்

பேளூர் அடுத்து நாங்கள் சென்ற இடம் தும்பல். கல்ராயன் மலையின் கிழக்கு பக்கத்தில்  அமைந்துள்ள ஊர் தும்பல்.  அங்கே உள்ள அரசு மருத்துவமனைக்கு அருகில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் உள்ளது.

கீழே உள்ள படம் பற்றி இன்னும் ஆய்வுசெய்ய படவில்லை. ஆணும் பெண்ணும் நடந்து செல்வது போலவும், ஒரு பெண் அமர்ந்து இருப்பது போலவும் உள்ளது. சிதைந்த நிலையில் உள்ளது.

ஆய்வு செய்யப்பட வேண்டிய கல் 

குத்துக்கல்  போல காணப்படும் இந்த கல்லை சுற்றி கல்வட்டங்கள் காணப்படுகிறது. இதுவும் ஒரு பெருங்கற்கால ஈம சின்னம் என்பது தெரிகிறது.
குத்துக்கல்லாக இருக்கலாம் 

 கல்வட்டங்கள் 

கல்வட்டங்கள் ( Cairn circle ) நம் முன்னோர்களின் நினைவிடங்கள். உலகம் முழுக்க  ஒரே மாதிரியான கல்வட்டங்களை காணலாம். இதன் மூலம் நாம், உலகம் முழுக்க ஒரே இனக்குழுவில் இருந்து தொடங்கியது என்பதை அறியலாம்.

நவீன கடவுள்கள் தென்பகுதிக்குள் நுழையும் முன்பு முன்னோர்களை கடவுளாக வணங்குவதே வழக்கத்தில் இருந்தது. இன்று இவைகளில் பெரும்பாலானவை நமக்கு முழுதாக கிடைப்பது இல்லை. காரணம் இதை பற்றிய போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை.


கல்வட்டங்கள் 

தும்பல்  மருத்துவமனை அருகே அதிக அளவிலான கல்வட்டங்களை நாம் காணலாம். கல்வட்டங்கள் அளவினை உள்ளே  நிற்பவரை வைத்து கணக்கிட்டு கொள்ளலாம்.

தெளிவாக தெரியும் கல்வட்டம்

பாதி மட்டுமே காணப்படும் கல்வட்டம்.

முந்தைய பகுதி :  பேளூர் 

Wednesday, 16 August 2017

பேளூர்

பேளூர்  அங்காளம்மன்  கோவில். 

இந்த வாரம் (12-8-2017) சேலத்தை நோக்கிய ஒரு பயணம், இரவு 12 மணிக்கு பெருங்களத்தூரில் பேருந்தை பிடித்து சேலத்துக்கு கிளம்பியாச்சு. காலை ஏழு மணிக்கு வேலுசாமி சாருடன் வாழப்பாடி சென்று அங்கிருந்து குளித்து கிளம்பி, வாழப்பாடியில் காலை உணவை முடித்து பேளூர் நோக்கி பயணத்தை தொடங்கினோம்.

பேளூர்  நோக்கி செல்லும் போதே இருபுறமும் மலைகளை காணலாம். இவ்வூர் பத்தாம் நூற்றாண்டில் சோழர்களின் நேரடி ஆட்சியில் இருந்திருக்கிறது. வரலாற்றில் மிக முக்கியமான இடம் பேளூருக்கு உண்டு. இங்கு பல கல்வெட்டுகளும், நடுகற்களும் காணலாம். வாழப்பாடியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் பேளூர் உள்ளது. பேளூரை அடுத்து அறுநூத்து மலை உள்ளதால் இயற்கை எழில் பொங்கும் இவ்வூரில், நான் பனைமரமே  பார்க்காத ஊர் பேளூர். இங்கு உள்ள தான்தோன்றீஸ்வரர் கோவில் மிகவும் பிரபலமானது. 

பேளூரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் 948ம் ஆண்டை சேர்ந்த முதலாம் பராந்தகன் கல்வெட்டு உள்ளது. கல்வெட்டில் சில பகுதிகள் மட்டுமே கிடைக்க பெறுகிறது.




கல்வெட்டு கூறும் செய்தி : 


ஸ்வஸ்திஸ்ரீ மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி என தொடங்குவதால் இது முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு என அறியப்படுகிறது.ஆத்தூரில் உள்ள நரசிங்கபுரம் என்ற ஊரில் உள்ள சிவன் கோவிலுக்கு பகலில் விளக்கு எரிய தானம் கொடுத்த செய்தியை கூறுகிறது.

அங்காளம்மன் கோவில் கல்வெட்டு 


மூக்கறுப்பு கல்வெட்டு 

பேளூர்  அங்காளம்மன் கோவிலுக்கு எதிரிலேயே நாம் மூக்கறுப்பு கல்வெட்டை காணலாம். மிகவும் முக்கியமான கல்வெட்டாக இது கருதப்படுகிறது.  மீசையுடநே மூக்கறு  ப்பிச்சார் என்னும் வாசகத்தை இக்கல்வெட்டில் நாம் காணலாம.

திருமலை நாயக்கருக்கும் மைசூர் மன்னர்  கந்திருவ  நரச ராஜாவுக்கும்  நடந்த போரை பற்றிய குறிப்புகளை இந்த கல்வெட்டு தருகிறது. கெம்பையா என்பவன் மன்னரின் உத்தரவுப்படி வழியில் எதிர்ப்பட்ட ஆண்,பெண்,குழந்தைகள் என அனைவரின் மூக்கையும் அறுத்து ஒரு சாக்குப்பையில் போட்டு மைசூரு அனுப்பி வைத்தாக தகவல் உள்ளது. மீசையோடு வந்தால் அதிக வெகுமானம் தரப்பட்டுள்ளது.

மூக்கறுப்பு கல்வெட்டு 

கல்லின் இன்னொரு பக்கம்

இதன் பின்னர் ராமநாதபுரம்  சேதுபதி மற்றும் ஏனைய பாளையக்காரர்கள் உதவியுடன் திருமலை நாயக்கர் மைசூர் படைகளை விரட்டி அடித்தார்.

A Voyage to the East India என்ற நூலில் ஜெ ஹெச்  குரோஸ்  என்பவர் மைசூர் படையின் தனித்துவமாக இந்த மூக்கறுப்பு இருந்தது என்றும் மூக்கறுப்பதில் இவர்கள் சாமர்த்தியசாலிகள் என்றும் கூறுகிறார்.  இப்போர் குறித்து இதுவரை கல்வெட்டு ஆதாரங்கள் கிடைக்கவில்லை. சமீபத்தில் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தால் இது கண்டுபுடிக்கப்பட்டது.


கல்வெட்டின்  கிழக்குப் புறம் 


மேற்கு பகுதி   

இதன் தொடர்ச்சி : தும்பல் 

Friday, 11 August 2017

நாற்பதுகளில் மெட்ராஸ்

இந்த நைட் ஷிப்ட் வேலைக்கு போறவனுக்கு எப்பவுமே மத்தியானம் தான் விடியும். எங்க தொடங்கும் , வழக்கம் போல ஆண்ட்ராய்ட் போன்தான். சண்டை போட்டு அண்ணன்கிட்ட வாங்குன பொம்மை எங்க இருக்குனு தூங்கி எழுந்த உடனே தேடுற குட்டி பாப்பா போல தேடும் மனசு.

Facebook , whatsapp , messenger, மெசேஜ் வருதோ இல்லையோ ஒருதடவை திறந்து பாத்துடணும். சரி கதைக்குள்ள வருவோம். அப்படி பாத்துட்டு இருந்த அப்போதான் நீங்க இன்னைக்கு வெங்கடேஷ் பேசுற நிகழ்ச்சிக்கு போறேன்னு போட்டு இருக்கீங்க, கிளம்புங்க என பொண்டாட்டி போல ஒரு நோடிபிக்கேஷன் வந்தது. வண்டி எடுத்துட்டு கிளம்பும் போது வழக்கமா சாயா குடிக்கிற கடைல கிண்டிக்கு அந்த பக்கம் மழைன்னு ஒருத்தன் கத்துறான் ரேடியோவில், சரி நம்ம வெங்கடேஷ் சார் பேசுனா இடி போல அதிரும், இதென்ன மழை பாத்துக்கலாம் அப்டின்னு கிளம்பியாச்சு.அப்புறம் மழை என்றால் கேரளாக்காரன் தான் பயப்படனும். நாம என்னைக்கோ பாக்குறோம், கொஞ்சம் நம்ம மேலயும் படட்டுமே.

மயிலாப்பூர் தாண்டி ஆர்க்கே கான்வென்ஷன் சென்டர் போயாச்சு. உள்ள போன உடனே வெங்கடேஷ் சார் என்ன ராஜா மழையா என்றார். ஆமா சார் மழைதான் நான் வந்த உடனே நின்னுடுச்சு அப்டின்னு சொல்லிபோட்டு இடம் தேடி வேலுதரன் சார் பக்கம் உட்காந்துட்டேன்.

திடீர்னு ஒரு சர்ப்ரைஸ், எப்பவாச்சும் காட்சி தரும் சுவேதா அக்கா. என்ன இது  மூலவர், உற்சவரா மாறி இந்த பக்கம் வந்துருக்கார் அப்டின்னு யோசிச்சா, டேய் நான்தான் வரேன் போட்டு இருந்தேனே பாக்கலை என்றார். ம்ம் என்று முடிக்க ஆரம்பித்தார் வெங்கடேஷ் சார், வெடித்தார்னு கூட சொல்லலாம்.

என்னடா இது நாலு வரி மணப்பாடம் பண்ணி அதை ஒரு பொண்ணு கிட்ட சொல்லவே கண்ணை கட்டுது, இவர் எப்படி எல்லாம் ஞாபகம் வச்சுருக்கார் என யோசிக்க தோணும் அவரை பார்க்கும் போது. அதிலும் அவர் sense of humour இருக்கிறதே , கண்டிப்பா பள்ளி கல்லூரில  எல்லா பொண்ணுங்களும் இவரை சுத்திதான் இருந்து இருக்கணும்.

இடிமழையில் சில துளிகள்

நாற்பதுகளின் ஆரம்பமே நெருப்புடா என தான் ஆரம்பிச்சுருக்கு, அதுல முக்கியமானது இந்தியன் எக்பிரஸ் ஆங்கில பத்திரிக்கை அலுவலகம் தான். முழுசும் எரிஞ்சு போச்சு, ஆனா மூனே நாளில் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு மாதிரி வந்துட்டானுங்க, எப்படி, அதான் நம்ம தி ஹிந்து இருக்கே அவங்க இடம் கொடுத்து அங்கையே பத்திரிக்கை நடத்த சொல்லிருக்காங்க, இப்போ எல்லாம் நினைச்சு கூட பாக்க முடியாது, பக்கத்து வீட்டுக்காரனே தண்ணி தர மாட்டான்.

காந்தியை பத்தி படம் எடுத்து அப்போவே வெளியிட்டு இருக்கார் ஏ.கே செட்டியார்.வெள்ளைக்காரன் அப்போவே அதை சென்சாரும் பண்ணிருக்கான்.

அடுத்து நம்ம பாரி, நம்ம மக்களுக்கு பாரிஸ் கார்னர் தெரியாம இருக்க வாய்ப்பே இல்லை. இந்த பாரி பண்ணாத பிசினஸ் ஏதும் இருக்கானு தேடனும். அதை விட முக்கியமான மேட்டர் ஒண்ணு இருக்கு. அது அவரோட உயில்.  நான் இறந்து ஒன்பது மாதங்களில் பிறக்கும் குழந்தைக்கு மட்டுமே  என்னோட சொத்துக்களில் பங்கு இருக்கிறது என்பது தான் அது. அடேங்கப்பா என்னா விவரம்.
கல்கி வாசன் தொடர்பு, ஜின்னா நம்ம ஊருக்கு வந்து திராவிடஸ்தானை நான் ஆதரிக்கிறேன் என சொன்னது, எம் எஸ் திருமணம், கல்கி பிறந்த கதை, இந்திய சுதந்திரம், ராஜாஜி பற்றி மேலும் பல தகவல்கள் என நீளும் அந்த பெருமழை.

இப்பெருமழையை இதமாக வீட்டில் நனையாமல் ரசிக்க

லிங்க் :  நாற்பதுகளில் மெட்ராஸ்  
  
கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லி முடிக்கிறேன்( இப்படி சொல்வதே உலக வழக்கம் ).

அது பெரியாரின் திருமணம். ராஜேந்திர சோழனின் மகள் திருமணத்திற்கு பிறகு மிகவும் முக்கியமான பல திருப்பங்களையும் குழப்பங்களையும், உருவாக்கிய திருமணம் என்றால் அது பெரியாரின் திருமணம் தான். அந்த திருமணத்தில் பிறந்தது தான் திமுக. இது போல உவமைகளை சிலரால் மட்டுமே கையாள முடியும்.

ஒருமணி நேரமே ஒதுக்கப்பட்ட பேச்சு இரண்டு மணி நேரம் தொட்டது. யாரும் அசையவில்லை முழுதும் முடியும் வரை.
மழை ஓய்ந்தது.

அப்புறம் என்ன வூட்டுக்கு போயி தூங்கியாச்சு.

நன்றி வணக்கம்.

வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் 

Monday, 7 August 2017

சாளுவன் குப்பம்

விடுமுறை என்றாலே ஊர் சுத்துவது வழக்கம் சிலருக்கு, எனக்கு சொல்லவே வேண்டாம். சென்னையில் உள்ள பாக்கிங்காம் கால்வாயை ஒட்டியுள்ள இடங்களை பார்வையிட ஒரு வாய்ப்பு கிடைத்தது.

காலையில் கிளம்பி ECR வழியாக சென்றோம். சென்னையில் வசிக்கும் ஒரு ஜீவனுக்கு மகாபலிபுரம் கண்டிப்பாக புதிதாக இருக்காது, முக்கியமாக இளமை ரவுசுகள் பெருபாலும் அரங்கேற்றம் அடைவது கிழக்கு கடற்கரையில் தான்.
நேராக மகாபலி புரம் தான் செல்கிறோம் என்று நினைத்த போது வண்டி ஊருக்கு ஐந்து கிலோமீட்டர் முன்னாடியே நின்றது, ஓ புலிக்குகையா என நினைத்தேன். ஆனால் நண்பர்கள் கூட்டி சென்றது வேறு ஒரு இடம்.பச்சை கலர் வேலியை கண்ட உடனே தொல்லியல் துறையின் கீழ் உள்ளது என்பது புரிந்தது.

என்னை முதலில் கவர்ந்தது அந்த பனைமரம்(படம் கீழே). எப்போதும் பனையின் மேல் எனக்கு தீராத காதல் உண்டு. அந்த ஊரின் பெயர் சாளுவன் குப்பம். நான் பார்த்துக்கொண்டிருப்பது சங்க கால முருகன் கோவில் என நண்பர்கள்  சொன்னதும் பழமை என்னை உப்புக்காற்றால் நனைத்தது. உப்பு பண்டம் கெட்டு போகுமோ?

தேடலே பயணங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும். மகாபலிபுரம், ஆலம்பரை, வெடால் என பல ஊர்கள் சென்று பயணம் முடிந்தது. ஆனால் சாளுவன் குப்பம் பற்றி அறிந்து கொள்ள மேலும் மேலும் ஆசை.

முருகன் கோவில்.

பல காலமாக மண்ணில் புதைந்து இருந்த முத்து ஆழிபேரலையில் மீண்டும் கண்ணில் பட்டது. ஆங்காங்கே தெரிந்த கல்வெட்டுகளில் பல்லவர் கால கட்டுமானம் இருப்பது தெரிந்தது. சங்க காலத்தில் இருந்த கோவிலின் மேலே பல்லவர்கள் கோவில் கட்டியுள்ளனர். தற்போது முற்றிலும் சிதைந்த நிலையில் தான் உள்ளது. சங்க இலக்கியங்களில் அறியப்படும் நீர்பெயற்று துறைமுகம் இதுவாக இருக்கலாம் என எண்ணினாலும் அதற்க்கான சான்றுகள் நம்மிடம் இல்லை. சாளுவன் குப்பத்தின் முந்தைய பெயர் திருவீழ்ச்சில் என்று கல்வெட்டு செய்திகள் மூலம் அறியலாம். கோவிலுக்கு அளித்த கொடைகள் பற்றிய செய்திகள் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. முதலாம் ராஜராஜனின் கல்வெட்டுகளும் இங்கே நாம் காணலாம்.
மேலும் தமிழ்நாட்டில் காணப்படும் சங்க கால கோவில்கள் இரண்டுதான் அதில் இதுவும் ஒன்று. மற்றொன்று வேப்பத்தூர் பெருமாள் கோவில்.

புலிக்குகை சென்று பார்ப்பவர்கள் பெரும்பாலும் இதை கவனிப்பதே இல்லை, 2000 ஆண்டு தொன்மை ஆழமான அஸ்திவாரத்துடன் நமக்காக காத்து நிற்கிறது.

கோவிலின் உள்ளே உள்ள பாறை 


கோவிலில் கண்ட பனைமரம் 

கோவிலின் முழு தோற்றம்

நண்பர் வேலுசாமி 



Saturday, 5 August 2017

ராஜகுமாரன் சட்டை

எதை பற்றிய கவலையும் இல்லாமல் மிக தீவிரமாக நாளைய தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்தான் குமார். நண்பர்கள் சாப்பிட அழைத்தும் செல்லவில்லை. தேர்வு அவனுக்கு முக்கியமானது என்பதை அவன் அறிவான். தமிழ் பள்ளியில் படித்து முதன் முதலாக கல்லூரியில் ஆங்கில தேர்வு என்பது எல்லோரையும் போல அவனையும் பதட்டமான மனநிலையிலையே வைத்து இருந்தது. பத்து மணியை தொட்டது கடிகாரம். மற்ற மாணவர்கள் குமார் சாப்பிட்டு வந்து படி, இன்னும் அரை மணி நேரத்துல ஹாஸ்டல் கேன்டீன் மூடி விடும் என்றார்கள். 

குமார் கேன்டீன் நோக்கி பறந்தான்.மூடி விடும் உணவு இருக்காது என்று வேகமாக கேன்டீன் அடைந்தான். நாளை தேர்வு என்பதால் எல்லோரும் முன்னரே சாப்பிட்டு சென்று விட்டனர். எனக்கும் தேர்வுக்கும் என்ன சம்பந்தம் என்னும் சிலர் மட்டுமே உணவு முடிந்தும் அரட்டை அடித்து கொண்டிருந்தனர். குமாருக்கு மிச்சம் மீதி என ஏதோ கிடைத்தது. உணவு பற்றி அவன் வறுத்தம் கொண்டதே கிடையாது எதையும் மானம்கோனாமல் உண்பான், விவசாயி மகன் ஆயிற்றே.

கல்லூரிக்கும் தங்கும் விடுதிக்கும் ஒரு 100 மீட்டர் தூரம் இருக்கும். ஹாஸ்டல் நோக்கி மெதுவாக சென்று கொண்டு இருந்தான். திடீரென காற்றை கிழித்து அவன் காதை தொட்டது ஒரு சத்தம். தூரத்தில் இருந்து ஒரு சிவப்பு நிற கதிர் ஹாஸ்டலை நோக்கி வந்தது. நெருங்கி வர வர அது இன்னும் பல நிறங்களாக பிரிந்தது. நேராக அவன் துவைத்து காயபோட்டு இருந்த சட்டையை நோக்கி சென்ற அக்கதிர் நாலு ஐந்தாக அவன் சட்டையை மட்டும் கிழித்து எறிந்து சென்றது. இருப்பதே ஐந்து சட்டைகள் அதிலும் ஒன்று இப்படி ஆனதே என்ற திகைப்பில் அதையே நோக்கி கொண்டிருந்த குமார் காலில் வலிப்பது போல இருந்தது.

பட்டென விழித்தான் குமார், கணேஷ் அவன் காலை உதைத்து கல்லூரிக்கு நேரம் ஆச்சு கிளம்புடா சோப்பு டப்பா என்றான். அட கனவா என்று ஆச்சர்யம் கொள்ளவில்லை, என்ன  கனவுடா என வறுத்த படத்தான் வைத்தது.  அவன் வருத்தத்துக்கு காரணம் இல்லாமல் இல்லை. சென்ற மாதம் ஊருக்கு சென்ற குமார் அப்பா புதிதாக மூன்று சட்டை வேண்டும் என்று சொல்லி இருந்தான்.
இப்போது உடுப்பது பள்ளி காலங்களில் எடுத்த உடைகளே. அப்பாவோ ஆகட்டும் பார்க்கலாம் என்றார் நடுத்தர வர்க்கத்து அப்பாக்களை போலவே. நேற்று இரவு கார்ல் சாகனின் காஸ்மோஸ் தியரி பற்றி நூலகத்தில் படித்து கொண்டிருந்தான். கல்லூரியில் நூலகம்  சென்று படிக்கும் வெகு சிலரில் குமாரும் ஒருவன். இன்னும் ஒரு மாதத்தில் முதல் தேர்வு வேறு உள்ளது. இதை எல்லாம் எண்ணி குழம்பியதால் தான் இப்படி ஒரு கனவு என எண்ணிக்கொண்டே காலை கடன் முடித்து வகுப்பு செல்ல தயராகிவிட்டான். எப்போதும் ஆளுக்கு முன் குளித்து காலை உணவை முடித்து நூலகம் சென்று செய்தித்தாள் படித்து பின்னர் வகுப்புக்கு செல்வது குமாரின் பழக்கம். மற்றவர்கள் கேன்டீன் வரை மட்டுமே அவனுடன் வருவார்கள். எதேச்சையாக ஒரு செய்தி கண்ணில் பட்டது குமாருக்கு.

"விண்ணை முட்டியது தக்காளி விலை, விவசாயிகள் மகிழ்ச்சி" என்பதே அது. குமாரின் எண்ணங்கள் சிறகை விரித்து பறந்து மின்னல் வேகத்தில் ஊருக்கு சென்றது. சென்ற மாதம் ஊருக்கு போன அப்பா தோட்டத்தில் தக்காளி நாத்து வாங்கி நட்டது ஞாபகம் வந்தது. இனி செந்நிற கதிரோ நீலகதிரோ எது வந்து சட்டையை கிழித்தால் என்ன , புதுசட்டைகள் கிடைக்க போகுது என்று உள்ளுக்குள் பூரித்தான் குமார். மீதி செய்திகளையும் புரட்டிவிட்டு கல்லூரிக்கு சென்றான்.

காலை வகுப்புகள் முடிந்தது. உணவு இடைவேளையில் நண்பர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தான். சரியாக முடியும் நேரத்தில் அவனது போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்பா கூப்பிடுகிறார் என்று சொல்லி சாப்பிட்டு முடித்த தட்டை எடுத்துக்கொண்டு கிளம்பினான் கழுவும் இடத்திற்கு. தட்டை கழுவும் இடத்தில் வைத்துவிட்டு அப்பா என்றான், என்னப்பா  சாப்பிட்டியா என்றார் அப்பா, ம்ம் சாப்பிட்டேன் அப்பா. சொல்லுங்கபப்பா என்றான் குமார். ஒன்னும் இல்லப்பா அக்கா வந்துருக்கா, கயல்விழி மாமா கிட்ட பேசணும் ஒரே வீம்பு அதான் மதியம் சாப்பிட வந்துருப்பனு கூப்புட்டோம் என்றார்.

குடுங்கப்பா என்றான் குமார். மாமா நல்லாருக்கீயா, சாப்டியா, ஊருக்கு வா என்னை பாக்க, என்று கட கடவென பேசி முடித்தாள் மழலை குரலில் அம்மா சொல்ல சொல்ல. குமாரும் சாப்பிட்டேன் கயல், ஊருக்கு அடுத்த மாசம் வரேன் என்று சொல்லிவிட்டு தாத்தாவிடம் குடு என்றான். இந்தா குடுக்குறேன் என்று சொல்லிவிட்டு தாத்தாவிடம் போனை குடுத்த வேகத்தில் துள்ளிகுதித்து வெளியே விளையாட சென்றாள் கயல்.
அப்பா என்றான் குமார். சொல்லுப்பா என்றார் அப்பா. சில நொடி மௌனத்திற்கு பிறகு அப்பா எனக்கு சட்டை எடுத்து தரேன் சொன்னிங்க, என்றான். பாக்கலாம் என்றார் எப்போதும் போல, இதன் அர்த்தம் குமார் நன்றாக அறிவான். சற்றே குரலை உயர்த்தி இதைத்தான் எப்போதும் சொல்றீங்க ஆனா எடுத்து தரமாட்டேங்குறிங்க என்றான். அப்பா சொன்னார் தம்பி காசு வரட்டும் அடுத்த முறை ஊருக்கு வரும் போது எடுத்து தரேன் என்றார். அப்பா காலைல பேப்பர் பாத்தேன் அப்பா தக்காளி விலை நூற்று ஐம்பது ரூபாய்க்கு போகுதாம். நம்ம காட்டுல தக்காளி போட்ருக்கோமே, அந்த காசை வச்சு வாங்கி தங்கப்பா என்றான் குமார். அப்பாவிற்கு புரிந்து விட்டது குமார் ஏன் வழக்கத்திற்கு மாறாக அடம் பிடிக்கிறான் என்று, அப்பா தொடர்ந்தார், தக்காளி விலை அதிகம் விவசாயி மகிழ்ச்சின்னு போட்டானே, தண்ணி இல்லாம எத்தனை நாத்து கருகிப்போச்சுன்னு அவனுக்கு எப்படி தெரியும் குமாரு என்றார் குரலில் சற்று தொய்வுடன். குமாருக்கு புரிந்துவிட்டது. சரிப்பா அடுத்த முறை வரும்போது வாங்கிக்கிறேன் என்று சொல்லி போனை வைத்தான்.

கை காய்ந்து விட்டது, பைப்பை திறந்து கையை கழுவி விட்டு திரும்பும் போது  பக்கத்து பைப்பில் தண்ணீர் வீணாக ஒழுகுவதை கண்டு குழாயை இறுக்கமாக அடைத்தான். ஏனோ அவன் மனம் அந்த இறுக்கத்தில் இளகியது.

Friday, 4 August 2017

சதுரங்கப்பட்டினம்

மெட்ராஸ் தெரியும் சட்ராஸ் தெரியுமா ??


சென்னைக்கு தெற்கே கல்பாக்கம் அருகே உள்ள கடற்கரை நகரம் தான் சதுரங்கப்பட்டினம். வரலாற்று தகவலின் படி 14 நூற்றாண்டு கல்வெட்டு இங்கு கிடைத்துள்ளது. அப்போது இதன் பெயர் ராஜநாராயணன் பட்டினம். அப்போதே வணிகர்கள் நகரமாக இருந்துள்ளது.

16ம் நூற்றாண்டில்  டச்சுக்காரர்கள் இங்கு வந்து கோட்டை கொத்தளங்களை அமைத்தனர். அவர்களின் முக்கிய வணிக நகரமாக இருந்தது சடராஸ்.

கோட்டைக்குள் செல்லலாம் !!

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதில்சுவர்கள் பீரங்கிகளுடன் நம்மை கம்பீரமாக வரவேற்கும்.

இந்த கோட்டையானது மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். இதன் நான்கு சுவர்களின் முனைகளில் எதிரிகளை மூன்று பக்கமும் நின்று தாக்கும் படி அமைக்க பட்டிருக்கும்.பருத்தி உடைகள் முத்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன .

கோட்டையில் மேல்மாடியில் நின்று கடலை பார்க்கும் போது உடைந்து போன குட்டி சுவரில் இருந்து பார்க்கும் போது இவ்வளவு அழகாக இருக்கிறதே! முழு கோட்டையின் மேல்மாடியில்!! என தோன்றும்.

கோட்டையின் உள்ளே சில கல்லறைகள் உள்ளன. ஒவ்வொரு கல்லறை மேலும் ஒரு அழகிய சின்னத்தை காணலாம்.

பின்னர் இந்த கோட்டை கிழக்கு இந்திய கம்பெனியால் கைப்பற்றப்பட்டது. தற்போது மிச்சம் மீதிகளே வரலாற்றின் எச்சங்களாக டச்சுக்காரர்களின் பெயர் சொல்ல நிற்கிறது.

king
கோட்டையின் முன்னாள் இருக்கும் பீரங்கி மற்றும் சுற்றுச்சுவர்.
கோட்டையின் உள்பக்கம் இருந்து எடுக்கப்பட்ட படம்.
கல்லறை மேல் காணப்படும்  அழகிய கப்பல் முத்திரை 



Monday, 11 May 2015

Lessons Learned from Mahakavi Bharathi

A few years ago I saw Kamal’s movie, Mahanathi where in the climax scene Kamal says the following lines –
தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப் பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிரையென பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான்வீழ்வேன் என்றே நினைத்தாயோ?
நின்னை சில வரங்கள் கேட்பேன்
அவை நேரே இன்றெனக்கு தருவாய் 
என்றன் முன்னைத் தீயவினை பயன்கள்
இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் 
இனி என்னைப் புதிய உயிராக்கி 
எனக்கேதும் கவலையறச் செய்து 
மதிதன்னை மிக தெளிவு செய்து 
என்றும் சந்தோஷம் கொண்டிருக்க செய்வாய்! 
என்றும் சந்தோஷம் கொண்டிருக்க செய்வாய்!
People whose only goal is to search (scavenging) for their next meal ,
those who are engaged in constant small talk about worthless things
as a result their minds have wilted and in constant mental despair and agony,
those who committed deeds with the motive of hurting many,
those who are growing old , evident with the greying hair (without achieving anything else),
and then would succumb to the cruel fate of death in the end,
Like these risible people,
Did you think that I will fall prey to these follies?
Oh Almighty! I ask you for certain boons,
grant them to me directly right away!
Let all the mistakes (sins) of my past,
be pardoned right away (Please help me get rid of them and they should not haunt me henceforth),
From now on let me begin afresh as a new soul,
no worries should haunt me,
make my intellect clear and sharp,
make me eternally happy,
make me eternally happy.


These lines were so powerful that ever since I heard them, I have used them as a touchstone to revive myself whenever I feel down or sad.
One of the powerful lessons that I learnt from Mahakavi was –
Don’t waste your life. Don’t die like a normal man .. be the change ..

தும்பல்

பேளூர் அடுத்து நாங்கள் சென்ற இடம் தும்பல். கல்ராயன் மலையின் கிழக்கு பக்கத்தில்  அமைந்துள்ள ஊர் தும்பல்.  அங்கே உள்ள அரசு மருத்துவமனைக்கு அர...